விஷ பாட்டிலுடன் வந்த விவசாயியால் பரபரப்பு

3 months ago 22

கடலூர், அக். 5: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விஷ பாட்டிலுடன் வந்த விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் முஷ்ணம் தாலுகா பேரூர் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன் (45). விவசாயி. இவர் நேற்று தாய், மனைவி, மகள் ஆகியோருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரகுராமனை சோதனை செய்தபோது அவர் தனது பையில் விஷ பாட்டில் ஒன்று வைத்திருந்தார்.

அதை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், ரகுராமனுக்கும், அதே ஊரை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த நபர் ரகுராமனின் தாயாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முஷ்ணம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் ரகுராமன் குடும்பத்தினருக்கு அறிவுரை கூறி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post விஷ பாட்டிலுடன் வந்த விவசாயியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article