அதிமுக ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதிக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் மாஜி அரசு அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான 16 இடங்களில் சோதனை: ரூ.4.73 கோடி பறிமுதல்: ஆதாரங்கள் அடங்கிய செல்போனை உடைத்த நபர் மீதும் நடவடிக்கை

13 hours ago 3

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மற்றும் சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளராக பாண்டியன் பணியாற்றினர். அவரது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 2021ம் ஆண்டு கண்காணிப்பு பொறியாளர் பாண்டியனுக்கு சொந்தமான வீடு, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம், வைரம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை பாண்டியன் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் மற்றும் முதல்வருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். இதனால் மாசு காட்டுப்பாட்டு வாரியம் தொடர்பான அனைத்து பணிகளையும் பாண்டியன் தான் கவனித்து வந்தார். அதேநேரம் மாசு காட்டுப்பாட்டு வாரியத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அதிகாரியாக வலம் வந்தார். இதனால் அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கினார்.

அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்றது உறுதியானது.
இதற்கிடையே சட்ட விரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் மாஜி சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தது. அதில் அவர் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்து இருந்தது உறுதியானது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6ம் தேதி சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளரான பாண்டியன் மற்றும் அவர் மூலம் ஆதாயம் அடைந்த நிறுவன இயக்குநர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என சென்னை மற்றும் வேலூர் என மொத்தம் 16 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.அதில், முன்னாள் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் தமிழ்நாடு அரசு துறைககளுடன் தொடர்புடைய சில அரசு அதிகாரிகள், முக்கிய ஆலோசகர்களின் சென்னை மற்றும் வேலூர் என 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சட்டவிரோத மற்றும் விரைவான சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதற்கு முக்கிய ஆலோசகர்களான பிரபாகர் சிகாமணி, ஏ.கே. நாதன், நவீன் குமார், சந்தோஷ் குமார், மற்றும் வினோத் குமார் ஆகியோர் சட்டவிரோத அனுமதிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரூ.4.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போது, வழக்கு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலோசகர்களாக, சில இடைத்தரகர்களாக செயல்பட்டு, முக்கிய அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச பணம் வழங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது. மேலும், விசாரணையின் போது குற்றச்செயல்களின் மூலம் பெறப்பட்ட சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது, முக்கிய ஆவணங்கள் அடங்கிய செல்போன் ஒன்றை ஒரு முக்கியமான ஆலோசகர் ஒருவர் கடுமையாக சேதப்படுத்தியுள்ளார். ஆதாரங்களை அழித்ததற்காகவும், சோதனைக்கு ஒத்துழையாமைக்காகவும் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அதிமுக ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதிக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் மாஜி அரசு அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான 16 இடங்களில் சோதனை: ரூ.4.73 கோடி பறிமுதல்: ஆதாரங்கள் அடங்கிய செல்போனை உடைத்த நபர் மீதும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article