கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துவங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி, சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் ஆகிய பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 19ம்தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து கருணாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து நேற்று 3 கார்களில் 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு சென்று அங்கு பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் மற்றும் இவரது தம்பி தாமோதரன் ஆகியோர் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு முதல் விசாரணையை துவங்கினர். சிறிது நேரம் மட்டும் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் பின்னர் கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி மற்றும் சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post விஷ சாராய வழக்கு சிபிஐ விசாரணை: சம்பவ இடங்களில் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.