சேலம், ஏப்.29: சேலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் விவாகரத்து வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்பி பீர்குடித்து விட்டு கார் ஓட்டி வந்த விவசாயி, தனது நண்பருடன் போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (55). இவர் கொல்லிமலை பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் விவாகரத்து வழக்கு சேலம் நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தனது நண்பர் மருதாசலம்(35) என்பவருடன் காரில் வெங்கடேஷ் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது, காரை வெங்கடேஷ் ஓட்டி வந்தார். அவர் நீதிமன்ற வளாகத்திற்கு வேகமாக வந்து ஹாரனை அடித்துள்ளார். அப்போது மோதுவது போன்று வேகமாக வந்ததாக கூறி, அங்கிருந்தவர்கள் அந்த காரை சுற்றி வளைத்தனர்.
இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் காரில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது, இருவரும் மதுபோதையில் இருப்பது தெரிந்தது. அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், நீண்ட நாட்களாக விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இன்று(நேற்று) நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் நண்பருடன் பீர் குடித்து விட்டு வந்ததாக வெங்கடேஷ் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் மிகுந்த சோகத்துடன் வெங்கடேஷ் திரும்பி சென்றார். நேற்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post விவாகரத்து வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பி பீர் குடித்து விட்டு கார் ஓட்டி வந்த விவசாயி போலீசிடம் சிக்கினார்: சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.