ராமேஸ்வரத்தில் விவாகரத்து கேட்டு பிரிந்து சென்ற மனைவி தன்னுடன் வர மறுத்த ஆத்திரத்தில், கணவன் அவரை அடித்துக் கொன்று, வீட்டு வாசலில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ராமேஸ்வரம் ஏரகாடு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தர்மராஜுவுக்கும் தனலட்சுமிக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு தர்மராஜ் அடிக்கடி அவரைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், 2018ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தனலட்சுமி, கணவரைப் பிரிந்து அதே ஊரில் வேறொரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.
விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்குமாறும் தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் தர்மராஜ் தனலட்சுமியைத் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை மதியம் வழக்கம்போல் தனலட்சுமியின் வீட்டிற்கு சென்ற தர்மராஜ், தன்னுடன் வருமாறு கேட்டு தொல்லை செய்து, வாக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.
அந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறவே, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றுள்ளனர். யாராவது தடுக்க வந்தால் வெட்டிவிடுவேன் என தர்மராஜ் அரிவாளை எடுத்துக் விரட்டியதால் பயந்துகொண்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
பிறகு நீண்ட நேரமாக தனலட்சுமியின் குரல் கேட்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது சகோதரனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர் போலீசாருடன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டில் கணவன் மனைவி இருவரும் இல்லை. இதையடுத்து பேருந்து நிலையத்தில் சுற்றிக்கொண்டிருந்த தர்மராஜைப் பிடித்து வந்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.
மனைவி தன்னுடன் வாழ மறுத்த ஆத்திரத்தில் , வேறு யாருடனும் வாழக்கூடாது எனக் கூறி, அவரை தர்மராஜ் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மயங்கி விழுந்த மனைவி மீது வேலிக் கல் ஒன்றைக் தூக்கிவந்து தலையில் போட்டுக் கொலை செய்து, சடலத்தை வீட்டு வாசலிலேயே புதைத்துவிட்டு தப்பி வந்ததாக தர்மராஜ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து, தனலட்சுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பள்ளி முடிந்து வீடு வந்த மகள்கள் இருவரும் அங்கு நடப்பதைக் கண்டு கதறி அழுதனர். ஆவேசமடைந்த உறவினர்கள், போலீசாரின் பிடியிலிருந்த தர்மராஜை விரட்டி விரட்டி தாக்கினர்.
தாய் கொலை செய்யப்பட்டு, தந்தையும் சிறை செல்லும் நிலையில், இரண்டு பெண் குழந்தைகளும் நிர்க்கதியாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.