
காசா,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.
ஓராண்டுக்கு மேலாக நடந்த மோதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி ஹமாஸ் அமைப்பு, ஆர் லெவி, எலி ஷராபி மற்றும் ஓஹாத் பென் அமி ஆகிய 3 பேரை நேற்று விடுவித்தது. இவர்களில் ஆர் லெவி நோவா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கடத்தப்பட்டவர். மற்ற 2 பேரும் கிபுட்ஜ் பகுதியில் வைத்து கடத்தப்பட்டனர்.
இந்த 3 பணய கைதிகளின் விடுவிப்புக்கு ஈடாக, 183 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், எக்ஸ் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வெளிவராமல் மறைக்கப்பட்ட செய்தி என்ற பெயரிலான அந்த வீடியோவில், இஸ்ரேலிடம் கைதியாக சிக்கிய இப்ராகிம் முகமது கலீல் அல்-ஷாவீஷ் என்பவர் பேசுகிறார். அவர் ஆசிரியர் பணியை செய்து வந்தவர் என கூறப்படுகிறது.
பாலஸ்தீனிய கைதியான இப்ராகிம் நேற்று இஸ்ரேல் நாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் கூறும்போது, 45 நாட்களாக கண்களை கட்டி, விலங்கு பூட்டி, முழங்கால் போடும்படி செய்தனர். சிறையில் இருந்து விடுவிக்கும் முன்பு மின்சாரம் பாய்ச்சியும், நாய்களை ஏவி விட்டும் கொடுமைகளை செய்தனர் என கூறியுள்ளார்.
இப்ராகிமின் முகம் மற்றும் உடல் ஆகியவை அவர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதற்கான அடையாளத்துடன் உள்ளன. இதுதவிர, அவர் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளுடனும் காணப்படுகின்றன.
ஹமாஸ் அமைப்பிடம் சிக்கிய இஸ்ரேல் பணய கைதிகள் சிலரின் அவல நிலை பற்றிய செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், பாலஸ்தீனிய கைதியின் அவல நிலையை பற்றிய செய்தியும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.