நாகர்கோவில்: குமரி மாவட்டத்தையும், கேரளாவையும் இணைக்கும் நீர்வழிப் போக்குவரத்து பாதையாக இருந்த வரலாற்று சிறப்பு மிக்க குமரி ஏ.வி.எம். கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. ஒரு காலத்தில் கொல்லத்தில் இருந்து மண்டைக்காடு வரை நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்புக்கு இக்கால்வாய் பிரதானமாக விளங்கியது. மண்டைக்காடு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடி பின்னர் ஏ.வி.எம். கால்வாயில் குளிப்பார்கள். அதன் பின்னரே பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். இக்கால்வாயில் மண்டைக்காட்டில் மட்டும் 8 இடங்களில் படித்துறைகள் இருந்தன. ஏ.வி.எம். கால்வாய் சீரமைக்கப்பட்டு நீர்வழிப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும், சுற்றுலா படகு இயக்கப்படும் என்றும் ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர்.
ஆனாலும் ஏவிஎம் கால்வாய் தூர்வாரப்பட வில்லை. ஏ.வி.எம். கால்வாயை சீரமைத்து மீண்டும் பழமை மாறாமல் நீர்வழி போக்குவரத்தை தொடங்கினால் வர்த்தகம் மட்டுமின்றி குமரி சுற்றுலா மேலும் சிறப்படையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். கடைசியாக மாவட்ட கலெக்டராக இருந்த தர், நீரோடி முதல் குளச்சல் கொட்டில்பாடு பகுதி வரையில் செல்லும் ஏ.வி.எம். கால்வாயை ஆய்வு செய்தார். இக்கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்ததால் தண்ணீர் தேங்கி நிற்பதோடு, அதிகமான பாசிகள் படர்ந்துள்ளது. இவற்றை தனியார் பங்களிப்புடன் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். ஏற்கனவே தமிழ்நாடு அரசு நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி பங்களிப்பு நிதியுடன் கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் இந்த கால்வாய் தூர்வாருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் தொடர்ந்து இது தொடர்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போதைய கலெக்டர் அழகு மீனா நேற்று, ஏவிஎம் கால்வாய் பகுதியை ஆய்வு செய்தார். நீரோடியில் இருந்து ஆய்வை தொடங்கினார். இந்த கால்வாய் எந்த பகுதி வழியாக செல்கிறது. எங்கு நிறைவடைகிறது என்பதை ஆய்வு செய்த கலெக்டர் அழகு மீனா, மண்டைக்காடு பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக ெபாதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அழகு மீனா கூறினார்.
The post விவசாயிகள் எதிர்பார்ப்பு; ஏவிஎம் கால்வாய் தூர்வாரப்படுமா?.. நீரோடி பகுதியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.