நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி - பெங்களூருவில் இன்று நடக்கிறது

3 hours ago 3

பெங்களூரு,

நீரஜ் சோப்ரா கிளாசிக் முதலாவது சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. ஒலிம்பிக்கில் 2 பதக்கம் (தங்கம், வெள்ளி) வென்றவரும், உலக சாம்பியனுமான இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஜெ.எஸ்.டபிள்யூ. ஸ்போர்ட்ஸ் மற்றும் இந்திய தடகள சம்மேளனம், உலக தடகள சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறார். இந்த போட்டிக்கு இந்திய தடகள சங்கம் 'ஏ' பிரிவு அந்தஸ்து அளித்துள்ளது.

முதலில் இந்த போட்டி கடந்த மே 24-ந் தேதி பஞ்ச்குலாவில் (அரியானா) நடத்த திட்டமிடப்பட்டது. அங்குள்ள ஸ்டேடியத்தில் ஒளிபரப்புக்கு தேவையான மின்னொளி வசதி இல்லாததால் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவியதால் தள்ளிப்போடப்பட்ட இந்த போட்டி இப்போது அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான தாமஸ் ரோக்லெர் (ஜெர்மனி), 2015-ம் ஆண்டு உலக சாம்பியன் ஜூலியஸ் எகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா), மார்ட்டின் கோனெக்னி (செக்குடியரசு), லூயிஸ் மவுரிசியோ டா சில்வா (பிரேசில்), ருமேஷ் பதிராகே (இலங்கை) சைபிரியன் மிர்சிகுளோட் (போலந்து), இந்தியாவின் சச்சின் யாதவ், ரோகித் யாதவ், சஹில் சில்வால், யாஷ்விர் சிங் ஆகிய 12 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

ஜூலியன் வெபர் (ஜெர்மனி), ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்) கலந்து கொள்ளவில்லை. 2 முறை உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா) கடைசி நேரத்தில் காயத்தால் விலகி விட்டார். முன்னணி வீரர்கள் ஒதுங்கியதாலும், தாமஸ் ரோக்லெர், ஜூலியஸ் எகோ தற்போது பார்மில் இல்லாததாலும் இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

Read Entire Article