விவசாயிகளின் கோரிக்கை ஏற்காத நிலையில் மார்ச் 19ல் மீண்டும் பேச்சுவார்த்தை: ஒன்றிய அமைச்சர் தகவல்

4 hours ago 2

சண்டிகர்: விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், மார்ச் 19ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.
வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், மின்சாரக் கட்டண உயர்வு கூடாது, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலான ஒன்றிய குழு, விவசாய பிரதிநிதிகளுடன் சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்தியது. அன்றைய கூட்டத்தில் பேசிய பிரகலாத் ஜோஷி, ‘விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை சண்டிகரில் நடைபெறும். அதில் ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் ஒன்றிய குழுவுக்கு தலைமை தாங்குவார். அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்பேன்’ என்றார்.

அதன்படி விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் பஞ்சாப் அரசின் அமைச்சர்களுடன் நேற்று சண்டிகரில் உள்ள மகாத்மா காந்தி பொது நிர்வாக நிறுவனத்தில் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ‘விவசாயிகளுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நேர்மறையானவையாக இருந்தன. விவசாயிகளின் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வரும் மார்ச் 19ம் தேதி சண்டிகரில் நடைபெறும். விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் ஒன்றிய அரசு தீவிர கவனம் செலுத்தும். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தல்லேவால், தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

The post விவசாயிகளின் கோரிக்கை ஏற்காத நிலையில் மார்ச் 19ல் மீண்டும் பேச்சுவார்த்தை: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article