*தூய்மையாக பராமரிக்க கோரிக்கை
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். நகராட்சி மைதானத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் நகர மையப்பகுதியில் நகராட்சி மைதானம் அமைந்துள்ளது. விழுப்புரம் பகுதியில் பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் இந்த மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் அவ்வப்போது கண்காட்சிகள் நடைபெறும். இதனிடையே மழைக்காலங்களில் தாழ்வான பகுதி என்பதால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கி இந்த நகராட்சி மைதானம் சேதமடைந்து கிடப்பதும் பின்னர் நகராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் வணிகர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிலர் நகராட்சி மைதானத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகின்றன. மேலும் அந்த குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புகள், போலீஸ் குடியிருப்புகளிலும் பொதுமக்களுக்கு கண் எரிச்சலை ஏற்படுகின்றன. பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நகராட்சி மைதானம் தூய்மையாக பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே நகராட்சி மைதானத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தீ வைத்து எரிப்பதை தடுக்கவும், நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை மீறி குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் மட்டுமே அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு இசைப்பள்ளி மற்றும் மைதானத்தின் ஓரங்களில் ஆங்காங்கே இந்த குப்பைகள் மலை போல் குவிந்து தீ வைத்து எரிக்கப்பட்டு மைதானமே அலங்கோலமாக காணப்படுகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த மைதானத்தை தூய்மையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுவதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதி appeared first on Dinakaran.