சிவகங்கை: சிவகங்கை அருகே கல் குவாரியில் மண் சரிந்து 5 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில், மேகவர்மன் என்பவருக்கு சொந்தமான புளூ மெட்டல் குவாரி இயங்கி வருகிறது. சுமார் 450 அடி ஆழமுள்ள இந்த குவாரியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 9 மணியளவில் குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டனர்.
சிலர் மலையில் டிரில் போட்டு பாறைகளை பெயர்த்தனர். பாறைகளை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் குவாரியில் திடீரென பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் பொக்லைன் இயந்திரம் ஒன்றும் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த இயந்திரம் மீது பெரிய பாறை ஒன்றும் சரிந்து விழுந்தது. மண் சரிவில் 6 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இவர்களில் உடனடியாக 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், வழியிலேயே 2 பேர் உயிரிழந்துவிட்டனர்.
படுகாயமடைந்த மைக்கேல் என்ற தொழிலாளி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலின்பேரில் திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் எஸ்.எஸ் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். அவர்கள், மண் சரிவில் சிக்கிய 3 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 பேரும் பாறை விழுந்த பொக்லைன் இயந்திரத்திற்கு அடியில் சிக்கியுள்ளதால் அவர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கல்குவாரியில் மண் சரிந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கல்குவாரியில் மண் சரிந்து 5 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.