விழுப்புரம்: விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்ட காவல்துறை உயர்அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனை மற்றும் மதிப்பாய்வு கூட்டம் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. டிஜிபி சங்கர்ஜிவால் தலைமை வகித்தார்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க், டிஐஜி திஷா மிட்டல், எஸ்பிக்கள் தீபக்சிவாச் (விழுப்புரம்), செந்தில்குமார் (கடலூர்), ரஜித்சதுர்வேதி (கள்ளக்குறிச்சி) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகள் போன்ற முக்கியமான பிரச்னைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தவும், ஜாதி மற்றும் வகுப்புவாத பிரச்னைகளை கட்டுப்படுத்தவும், குற்றங்களை கண்டறிதல் மற்றும் குற்றதடுப்பு நடவடிக்கைகள், இணையவழி குற்றங்கள் தடுத்தல், சாலை விபத்தை தடுத்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அருகில் புதுச்சேரி மாநிலம் இருப்பதால் சாராயம், மது கடத்தலை தடுப்பது, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், குற்றவாளிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குவது தொடர்பான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவும் அறிவுரைகள் வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
The post விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி 3 மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து டிஜிபி ஆய்வு: குற்றங்களை தடுக்க எஸ்பிக்களுக்கு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.