கோவை: தென்மேற்கு பருவமழைக் காலம் அடுத்த சில தினங்களில் தொடங்க உள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் நிலை உள்ளதால், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு தினங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பருவமழைக் காலங்களில் மாநகரில் சாலையோர தாழ்வான இடங்கள், ரயில்வே சுரங்கப் பாதைகளின் கீழ் புற வழித்தடங்கள், மேம்பால கீழ் வழித்தடங்கள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது, மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், தேங்கினாலும் விரைவாக நீரை வெளியேற்ற ஏதுவாக கூடுதல் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன.