விழுப்புரம் அருகே பரபரப்பு முதல் கணவரை பிரிந்து வந்து குடும்பம் நடத்திய பெண்ணுக்கு கத்திக்குத்து

4 months ago 13

 

விழுப்புரம், ஜன. 8: விழுப்புரம் அருகே முதல் கணவரை பிரிந்து வந்து குடும்பம் நடத்திய பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். விழுப்புரம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் கார்திபன் மனைவி தனலட்சுமி (எ) கார்த்திகா (25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கணவனை பிரிந்து சென்று கடந்த 8 மாதமாக முத்தோப்பு பகுதியை சேர்ந்த அரவிந்த் (29) என்பவருடன் தனது குழந்தையுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

அப்போது அரவிந்த் மிக்சி, டேபிள் பேன் வாங்கி கொடுத்தாராம். இவர்களுக்குள்ளும் தகராறு ஏற்படவே கடந்த 2 மாதமாக தனலட்சுமி பிரிந்து வாழ்ந்து வருகிறாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் அரவிந்த், தனலட்சுமி வீட்டுக்கு சென்று மிக்சி, டேபிள் பேன் உள்ளிட்டவைகளை திருப்பி கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் தான் வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் அரவிந்த் மீது நகர காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post விழுப்புரம் அருகே பரபரப்பு முதல் கணவரை பிரிந்து வந்து குடும்பம் நடத்திய பெண்ணுக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Read Entire Article