சென்னை: விழுப்புரம் அருகே கருங்கல் விழுந்து உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள டீ.கொசபாளையம் கிராமத்தில் கடந்த வருடம் பெஞ்சல் புயலில் போது சாலை முற்றிலும் சேதம் அடைந்தது. அந்த சாலையில் உள்ள சேதமடைந்த ஓடையை சீரமைக்க அதே ஊரை சேர்ந்த சங்கர் என்பவர் டெண்டர் எடுத்துள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் பொக்லைன் இயந்திரம் வைத்து ஓடையை சீரமைத்தபோது பெரியபாறை இருந்துள்ளது. அதனை அப்புறப்படுத்த முடியாத நிலையில் ஜெலட்டின் குச்சி வெடி வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் 200 மீட்டர் தொலைவில் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலையின் மனைவி முத்துலட்சுமி (35), அவரது மகள் காயத்ரி (10) ஆகியோர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். வெடி வெடித்தபோது, எதிர்பாராதவிதமாக பாறைகள் சிதறி அங்கு ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த காயத்ரியின் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண்ணெதிரே மகள் துடிதுடித்து இறந்ததை பார்த்த முத்துலட்சுமி கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் அருகே கருங்கல் விழுந்து உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது வாய்க்கால் நடுவிலிருந்த பாறையை அகற்றும் பொருட்டு நேற்று மாலை அப்பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முத்துலட்சமி என்பவரின் மகள் காயத்திரி (வயது 10) என்பவரின் தலையின் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் விபத்தில் உயிரிழந்த சிறுமி காயத்திரியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post விழுப்புரம் அருகே கருங்கல் விழுந்து உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.