விழுப்புரத்தில் நாளை ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 days ago 1

சென்னை,

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையிலும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான தெருக்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 3,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) விழுப்புரம் செல்கிறார். நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் முதல்-அமைச்சர் மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.

ஏற்கனவே கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில்பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article