லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலம் இதற்கு முன் இந்து மத கடவுள் ஹரிஹரின் வழிபாட்டு தலமாக இருந்ததாகவும் இது குறித்து ஆராய வேண்டுமென கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் ஆய்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதேபோல், கடந்த மாதம் 24ம் தேதி அதிகாரிகள் 2வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தனர்.
அப்போது, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று செல்ல திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு காரில் செல்ல புறப்பட்டனர்.
டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் எல்லையை நெருங்கிய போது காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிற காங்கிரஸ் எம்.பி.க்கள் சம்பல் மாவட்டத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பல் மாவட்டத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போலீசாருடன் சம்பல் மாவட்டத்திற்கு தனியாக செல்ல தயாராக இருப்பதாகவும் அதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சம்பல் மாவட்டத்திற்குள் செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இது அரசியலமைப்பு எனக்கு வழங்கியுள்ள உரிமை. போலீசாருடன் நான் மட்டும் தனியாக சம்பல் மாவட்டத்திற்கு செல்ல தயார். ஆனாலும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது' என்றார்.
அதேவேளை, சம்பல் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து ராகுல் காந்தி மீண்டும் டெல்லி திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.