விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நாளை 13ம் தேதி பூசாரி கைகளால் திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு வேண்டுதலை நிறைவேற்றுவர். தொடர்ந்து 14ம் தேதி கூத்தாண்டவர் தேரோட்டம் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
இதையொட்டி திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் மிஸ்கூவாகம், மிஸ் திருநங்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நகராட்சி திடலில் நேற்று இரவு நடந்தது. விழாவில் கல்வி, காவல்துறை, டாக்டர், விவசாயம், சுயதொழில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி சாதனைபடைத்து வரும் 22 திருநங்கைகளுக்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பொன்முடி எம்எல்ஏ, நடிகர் விஷால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக மிஸ் திருநங்கை-2025 தேர்வு இரவு 9.50 மணிக்கு மேல் நடந்தது. 3 சுற்றுகள் வாரியாக போட்டிகள் நடைபெற்றன. முதல் சுற்றில் 13 திருநங்கைகள் பங்கேற்றனர். ஒய்யாரமாக நடந்து வந்த திருநங்கைகளின் நடை, உடை, பாவனை அடிப்படையில் 2வது சுற்றுக்கு 5 பேரை நடன இயக்குநர் ஜெப்ரி வார்டன் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்தது. தொடர்ந்து இறுதி சுற்றில், மேடையில் வலம் வந்த திருநங்கைகளிடம் பொது அறிவு, பாலினம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை-2025’ பட்டம் வென்றார். இவருக்கு கிரீடத்தோடு ரூ.20 ஆயிரம் காசோலை பரிசாக வழங்கப்பட்டது. சென்னையை சேர்ந்த ஜோதா, விபாஷா ஆகியோர் முறையே 2வது, 3வது இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு கிரீடத்துடன் ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.
The post விழுப்புரத்தில் அழகி போட்டி: ‘மிஸ் திருநங்கை’யாக தூத்துக்குடி சக்தி தேர்வு appeared first on Dinakaran.