சென்னை: டியூரல் ஆர்டெரியோவெனஸ் ஃபிஸ்துலா என்ற அரிதான பாதிப்புக்கு வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 60 வயதான முதியவர், எவ்வித எச்சரிக்கையும் இன்றி, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று அவருக்கு முதலுதவியை வழங்கி உயிருக்கு ஆபத்து நிகழாமல் அவரை நிலைப்படுத்தினர். அதைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த நேரத்திலும் அவர் நினைவிழந்த கோமா நிலையிலேயே இருந்தார். அவரது மூளையில் செய்யப்பட்ட ஸ்கேன் சோதனையானது, மண்டையோட்டுக்குள் தீவிரமான ரத்தக்கசிவு மற்றும் மண்டையோட்டிற்கு உட்புறத்தில் அதிக அழுத்தம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அது மட்டுமின்றி மேற்பரிசோதனையில், மூளையில் தமனிகளுக்கும் மற்றும் நரம்புகளுக்கும் இடையே ஒரு இயல்புக்கு மாறான பிணைப்பான டியூரல் ஆர்டெரியோவெனஸ் (AV) பிஸ்துலா என்ற அரிதான பாதிப்பு நிலை இருப்பதாக கண்டறியப்பட்டது.
மண்டையோட்டுக்குள் இருந்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக எக்ஸ்டெர்னல் வென்ட்ரிகுலர் டிரைனேஜ் (EVD) என்ற மருத்துவ செயல்முறையை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, செயற்கை சுவாசக் கருவி ஆதரவு மற்றும் தொற்றுக் கட்டுப்பாடு உட்பட, தீவிர சிகிச்சை மேலாண்மை அவருக்கு வழங்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் மற்றும் குறைபாடுள்ள ரத்தநாளத்தை கண்டறிவதற்கும், பெருமூளையில் ஒரு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.
பிஸ்துலா எனப்படும் வெளிநோக்கிய துளையை வெற்றிகரமாக அடைப்பதற்கு ஒரு நுட்பமான ரத்தக்குழாய் செயல்முறையை காவேரி மருத்துவமனை மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை குழுவினர் மேற்கொண்டனர். 21 நாளுக்குள் செயற்கை சுவாச கருவியின் இணைப்பு இவருக்கு அகற்றப்பட்டது மற்றும் தீவிரமான மூளை – நரம்பியல் புனர்வாழ்வு சிகிச்சை இவருக்குத் தொடங்கப்பட்டது. இன்றைக்கு இந்நபர் முழு நினைவுத்திறனுடன் இருப்பதோடு, பிறர் உதவியின்றி தனியாக நடமாடுகிறார்; தொடர்ந்து நிலையாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வந்து கொண்டிருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post டியூரல் ஆர்டெரியோவெனஸ் பிஸ்துலா என்ற அரிதான பாதிப்புக்கு வெற்றிகரமான சிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.