விழுப்புரத்தில் அடுத்தடுத்து ஆய்வு; அதிகாரிகளுக்கு துணை முதல்வர் டோஸ்: பள்ளியில் உணவு சரியில்லாததால் ஒப்பந்ததாரர் அதிரடி நீக்கம்

1 week ago 3

விழுப்புரம்: விழுப்புரத்தில் துணை முதல்வர் அடுத்தடுத்த ஆய்வுகளில் ஈடுபட்டு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார். பள்ளியில் காலை உணவு சரியில்லாததால் ஒப்பந்ததாரரை அதிரடியாக நீக்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றுமுன்தினம் வந்தார். 5ம்தேதி மாலை அரசு சட்ட கல்லூரியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துகொண்டு ஓய்வெடுப்பதற்காக செல்வார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று சாலாமேடு பகுதியில் அரசு மாதரி பள்ளிக்கு சென்றார். அப்போது உணவு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுப்பது குறித்து கேட்டறிந்த அவர் கழிவறைகளை முறையாக பராமரிக்காததால் வார்டனை கண்டித்து டோஸ் விட்டார். தொடர்ந்து நேற்று காலை திடீரென ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்று விவசாயிகளிடம் கொள்முதல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இதனை அதிகாரிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து மார்க்கெட் கமிட்டியில் பருத்தி, எள், மணிலா மற்றும் நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளையும், திறந்தவெளி ஏலக் கொட்டகையில் தரப்பரிசோதனை நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல் விற்பனை செய்வதற்காக வந்திருந்த பிடாகத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற விவசாயியிடம் ஏலத்தொகை விவரம், எத்தனை நாட்களுக்குள் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்து, அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், அன்றாட சந்தை நில விவரம், விளைபொருட்கள் இருப்பு பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். அங்கு கழிவறைகளை முறையாக பராமரிக்காததால் அதிகாரிகளை கண்டித்தார்.

சிறப்பு செயலாக்க திட்ட அலுவலர் தாரேஸ்அகமது தலைமையிலான அதிகாரிகள் முதல்வரின் சிறப்பு திட்டங்களான காலை உணவு, விடியல் பயணம் குறித்து முன்கூட்டியே நேரடியாக களஆய்வு மேற்கொண்டு புகார்களை துணை முதல்வரிடம் வழங்கினர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு அதிகாரிகளுடனான கூட்டத்தில், புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, காலை உணவு சரியாக வழங்காததை சுட்டிகாட்டி உடனடியாக இதற்கான ஒப்பந்ததாரரை மாற்ற அதிரடியாக உத்தரவிட்டார். அதேபோல், புகார் தொடர்பாக பயனாளிக்கு போன் செய்த துணைமுதல்வர் கூட்டத்திலேயே அதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து ஒரு வாரத்திற்குள் தீர்வு காண உத்தரவிட்டார்.

பின்னர் அரசு நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு குளோரின் பவுடர் போடாதது குறித்தும், கழிவறை, ஆடைகள் மாற்றும் அறைகளை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார். துணை முதல்வரின் அடுத்தடுத்த ஆய்வுகளால் மற்றத்துறை அலுவலகங்கள் உஷாராகின. அனைத்து பணிகளும் ஜரூராக நடைபெற்றது. விழுப்புரத்தில் துணை முதல்வரின் இந்த அடுத்தடுத்த ஆய்வுகளும், அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவுகளும், ஒப்பந்தம் ரத்து போன்ற நடவடிக்கைகளும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திட்ட பணிகளை முடிக்க காலக்கெடு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கள்ளச்சாராயம் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது நல்லாளம் ஊராட்சியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், வி.மாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மலர் ஆகியோரின் மனுக்களை பார்வையிட்டு, அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதுபோன்று தொடர்ந்து விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

எனவே அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு வரும் மனுக்கள் மீது உரிய கவனத்துடனும், விரைந்தும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை காகிதங்களாக பார்க்காமல், கோரிக்கைகளில் உள்ள மக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அடிக்கடி குறிப்பிடுவார். அரசு திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அரசு அலுவலர்களாகிய நீங்கள்தான் அரசிற்கும், பொதுமக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும்’ என்றார்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளிலும் என்னென்ன பணிகள் நடைபெற்றிருக்கிறது, என்னென்ன இடர்பாடுகள் இருக்கிறது, அதை எப்படி முடிக்கலாம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் காலக்கெடு நிர்ணயித்து, பணிகளை முடிக்க அறிவுறுத்தியிருக்கிறோம். ஆய்வுக்கூட்டம் குறித்த அறிக்கையை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் அங்கிருந்து அதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வர்’ என தெரிவித்தார்.

The post விழுப்புரத்தில் அடுத்தடுத்து ஆய்வு; அதிகாரிகளுக்கு துணை முதல்வர் டோஸ்: பள்ளியில் உணவு சரியில்லாததால் ஒப்பந்ததாரர் அதிரடி நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article