விழுப்புரத்தில் 17-ந்தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

4 hours ago 3

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்ற நாளில் இருந்து, எனது தலைமையிலான அம்மா ஆட்சியில், மக்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்குவது; நீர்த்துப்போகச் செய்வது; தான் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது போன்ற செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இந்த அரசு ஒரு செயலற்ற அரசு என்பதை நாள்தோறும் நிரூபித்துக்கொண்டு இருகிறது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்ட, இந்தக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பில், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் தூண்டுதலோடு, விழுப்புரம் நகரத்தில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழக விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தினை மூடும் நோக்கத்தில், இம்மையத்திற்கு மட்டும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.

இதன்மூலம் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவியர் கல்வி பயிலும் வகையில், அண்ணாமலை பல்கலைக்கழக விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 17.7.2025 வியாழக் கிழமை காலை 9 மணியளவில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகம், எம்.பி., தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகராட்சி, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article