விளையாட்டு மைதானங்களில் முன்னாள் கர்னல், வாலிபர் திடீரென மயங்கி விழுந்து சாவு

3 months ago 11

சென்னை: ராணுவ மைதானத்தில் பேட்மிண்டன் விளையாடிய போது முன்னாள் படை வீரர்கள் பிரிவில் பணியாற்றிய கர்னல் ஜான்சன் தாமஸ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல், நந்தனம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்த வாலிபரும் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜான்சன் தாமஸ் (50), ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வழக்கமாக மன்றோ சிலை அருகே உள்ள ராணுவ மைதானத்தில் பேட்மிண்டன் விளையாடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை ஜான்சன் தாமஸ் விளையாடினார்.

அப்போது ஓய்வு நேரத்தில் தண்ணீர் குடித்துவிட்டு மைதானத்திலேயே அமர்ந்து இருந்தார். திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக ராணுவ அதிகாரிகள் அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ஜான்சன் தாமஸ் இறந்துவிட்டதாக கூறினர். பிறகு திருவல்லிக்கேணி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (25), சென்னை தி.நகரில் தங்கியிருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கார்த்திக் பணியாற்றும் நிறுவன ஊழியர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியை காண கார்த்திக் வந்து இருந்தார். தனது நண்பர்கள் விளையாடும் அணி வெற்றி பெற வேண்டும் என்று மைதானத்தில் ஆரவாரம் செய்துள்ளார்.

அதேநேரம் தனது நண்பர்கள் அதிக ரன்கள் சேர்க்கும் போது, உற்சாக மிகுதியில் துள்ளி குதித்துள்ளார். அப்போது திடீரென கார்த்திக் மூச்சு திணறல் ஏற்பட்டு துடித்துள்ளார். இதை பார்த்த சக ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நந்தனம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ மைதானத்தில் முன்னாள் கர்னல் ஒருவர் விளையாடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்ததும், நந்தனத்தில் கிரிக்கெட் விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விளையாட்டு மைதானங்களில் முன்னாள் கர்னல், வாலிபர் திடீரென மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Read Entire Article