
துபாய்,
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த நியூசிலாந்து முன்னணி வீரரான வில்லியம்சன், அக்சர் படேலின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். ஒருவேளை அவர் ஆட்டமிழக்கவில்லை என்றால் அந்த போட்டியின் முடிவு வேறு மாதிரி கூட சென்றிருக்கலாம்.
இந்நிலையில் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்திய அக்சர் படேலை சக வீரர்கள் அனைவரும் பாராட்டினர். அதிலும் குறிப்பாக விராட் கோலி, அக்சர் படேலின் காலில் விழ சென்றார். இதனை கவனித்த அக்சர் படேல், அவரும் தரையில் அமர்ந்து சிரித்தபடியே சமாளித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.