புதுடெல்லி: ஜார்கண்ட் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் 2 கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு அடுத்த சில வாரங்களில் சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளன. ஜார்கண்ட்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சரான ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சியும், ஜார்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சி, ஜார்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது கூட்டணி பிளவை உறுதி செய்துள்ளது.
அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான லோக் ஜன சக்தி கட்சியும் (ராம்விலாஸ் பஸ்வான்) ஜார்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. பாஜகவுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடவும் தயங்கமாட்டேன் என்று ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் கூறினார். எனவே இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவும், லோக் ஜனசக்தி கட்சியும் ஜார்கண்ட் பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
ஜார்கண்ட் சட்டசபையில் உள்ள 81 இடங்களில் 28 இடங்கள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட இந்த தொகுதிகளில் ஒன்றைக் கூட தனது கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதில்லை என்று பாஜக முன்னதாகவே முடிவு செய்தது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) போன்ற கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஜார்க்கண்ட் தேர்தலில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது.
99 சதவீத இடங்களுக்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் மாநில பொறுப்பாளரான பாஜக ஒன்றிய அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடக்கும்; ஜார்கண்டில் பாஜக கூட்டணியில் பிளவு: 2 கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.