விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 5,800 சம்பா நெல் மூட்டைகள் வருகை

2 hours ago 2

விருத்தாசலம், ஜன. 24: விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா நெல் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் 5,800 நெல்மூட்டைகள் வந்து குவிந்துள்ளன. கடலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் விளைவித்த நெல், மணிலா, கம்பு, சோளம், கேழ்வரகு, எள், உளுந்து உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து பொருட்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விருத்தாசலம் பகுதியில் தற்போது நெல் சாகுபடி முடிவடைந்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் விளைவித்த நெல்மூட்டைகளை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, நல்லூர், கம்மாபுரம், மங்கலம்பேட்டை, வேப்பூர் மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தானிய பயிர்களை இங்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது விருத்தாசலம் பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் முடிவடைந்து அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று மட்டும் 5 ஆயிரத்து 800 நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் பிபிடி (புதிய) நெல் ரகம் அதிகபட்சமாக ₹1,675க்கும், குறைந்தபட்சம் ஆயிரத்து 382க்கும் சராசரியாக ஆயிரத்து 599க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் மணிலா அதிகபட்சமாக ₹8 ஆயிரத்து 711க்கும், குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 489க்கும், எள் அதிகபட்சமாக ₹11 ஆயிரத்து 599க்கும், உளுந்து அதிகபட்சமாக 8 ஆயிரத்து 819க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

The post விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 5,800 சம்பா நெல் மூட்டைகள் வருகை appeared first on Dinakaran.

Read Entire Article