விராலிமலை, பிப்.11:விராலிமலை முருகன் மலைக் கோயில் நேற்று நடைபெற்ற தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணகாண பக்தர்கள் திரண்டு நின்று அரோகரா சரண கோஷத்துடன் தேர் வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வரலாற்று புகழ்பெற்ற முருகன் மலை கோவில் உள்ளது. நகரின் மத்தியில் வனங்கள் சூழ்ந்து அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல நிகழாண்டு தைப்பூச விழா கடந்த பிப்ரவரி, 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் முருகனுக்கு ஆறுகால பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
தொடர்ந்து, தினம்தோறும் நடைபெற்று வரும் விழாவில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக மயில் வாகனம், பூத வாகனம், நாக வாகனம்,சிம்ம வாகனம்,வெள்ளி குதிரை, கேடயம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கிரிவலப்பாதையில் திருவீதி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின், ஒன்பதாம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 8 மணியளவில் மலைமீது இருந்து வள்ளி,தேவசேனா சமேதராக சண்முகநாதர் இறங்கி வந்து 36 அடி உயர தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து 9.45 மணி அளவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணகாண பக்தர்கள் கோயில் முன்பு திரண்டு நின்று அரோகரா சரண கோஷத்துடன் தேர் வடம் பிடித்தனர். தைப்பூச விழாவின் பத்தாம் நாள் இன்று (பிப்.11ம்தேதி) நடராஜர் தரிசனம், தீர்த்தவாரியும் அதை தொடர்ந்து மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. நாளை 11ம் நாள் விடையாற்றியுடன் தைப்பூச விழா நிறைவடைகிறது.
The post விராலிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம் appeared first on Dinakaran.