விராலிமலை, பிப்.10: விராலிமலை முருகன் மலைக் கோயிலில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (10ம்தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்வில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வரலாற்று புகழ்பெற்ற முருகன் மலை கோவில் உள்ளது. நகரின் மத்தியில் வனங்கள் சூழ்ந்து அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல நிகழாண்டு தைப்பூச விழா கடந்த பிப்ரவரி, 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் முருகனுக்கு ஆறுகால பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தொடர்ந்து, நடைபெற்று வரும் விழாவில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக மயில் வாகனம், பூதவாகனம், நாக வாகனம்,சிம்ம வாகனம்,குதிரை வாகனம்,கேடயம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கிரிவலப்பாதையில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
விழாவின் ஒன்பதாம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு வள்ளி,தேவசேனா சமேதராக முருகன் திருத்தேரில் எழுந்தருளிகிறார். அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. தைப்பூச விழாவின் பத்தாம் நாளான நாளை (11ம்தேதி) நடராஜர் தரிசனம், தீர்த்தவாரியும் அதை தொடர்ந்து மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 11ம் நாள் விடையாற்றியுடன் நிகழாண்டுக்கான தைப்பூச விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர்,மண்டகப்படி உபயதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
The post விராலிமலை முருகன் கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம் appeared first on Dinakaran.