விராலிமலை,நவ.29: விராலிமலை கிழக்கு பகுதியில் உள்ள சிதம்பரம் கார்டன் குடியிருப்பில் சூழ்ந்துள்ள கழிவுநீரை வெளியேற்றுவதற்கு வழித்தடம் ஏற்படுத்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விராலிமலை கிழக்கு பகுதியில் உள்ளது சிதம்பரம் கார்டன் இங்கு நூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கடைசி பகுதியான சிதம்பரம் கார்டன் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. அதுவும் மழை காலங்களில் அதிக அளவு கழிவுநீர் சூழ்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான குடியிருப்பு வாசிகள் கழிவுநீர் செல்ல வழித்தடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் ரவி உள்ளிட்ட உள்ளாட்சி துறை அதிகாரிகள் சிதம்பரம் கார்டன் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் செல்ல எவ்வாறு வழித்தடம் அமைப்பது என்று சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து விரைவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு முறையாக கழிவுநீர் செல்ல வழிவகை செய்யப்படும் என்று ஆய்வுக்கு பின் தெரிவித்தனர்.
The post விராலிமலை பகுதியில் கழிவுநீர் சூழ்ந்த குடியிருப்பு appeared first on Dinakaran.