விராட், ரோகித், பும்ரா இல்லை.. அவர்தான் இந்தியாவின் துருப்புச்சீட்டு - கம்மின்ஸ்

3 months ago 16

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே இம்முறை இந்தியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆஸ்திரேலியா வெல்லும் என்று கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று ஏதாவது பேசிக்கொண்டே இருக்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தம்மை சிரிக்க வைக்கக் கூடியவர் என்றும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "கடந்த முறை ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது ரிஷப் பண்ட் மிகச்சிறந்த தொடரை கொண்டிருந்தார் அவர் எப்போதும் இந்தியாவின் துருப்புச்சீட்டாக செயல்படக் கூடியவர். அவர் எப்படி விளையாடுவார் என்பது உங்களுக்கு தெரியாது. அது எதிரணியாக இருந்தாலும் உங்களுக்கு சுவாரசியத்தை கொடுக்கும். ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று கொண்டு அவர் எப்போதும் ஏதாவது வேடிக்கையாக சொல்வார். அது என்னை சிரிக்க வைக்கும். தற்போது சிறிய இடைவெளியில் இருக்கும் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு ஆர்வத்துடன் உள்ளோம்.

கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் எப்போதும் ஆஸ்திரேலியாவில் பெருமையுடன் விளையாடுகிறோம். கடந்த 2 தொடர்கள் நடந்து நீண்ட காலமாகி விட்டது என்பதால் நாங்கள் அந்த தோல்விகளிலிருந்து வெளியே வந்து விட்டோம். கடந்த தொடர் காபாவில் கடைசி மணி நேரம் வரை சுவாரசியமாக சென்றது. துரதிஷ்டவசமாக எங்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை. அந்தத் தொடரில் இருந்த பெரும்பாலான வீரர்கள் இம்முறையும் எங்கள் அணியில் உள்ளனர். எனவே அந்த தோல்வியை இம்முறை நாங்கள் திருத்துவதற்காக இங்கே உள்ளோம்.

சுப்மன் கில்லுக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். ஜெய்ஸ்வாலுக்கு எதிராக கொஞ்சம் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளேன். அந்த இருவருமே நல்ல திறமையுடையவர்கள். அவர்கள் இங்கே வரும்போது எப்படி வீழ்த்தலாம் என்ற திட்டங்களை வகுப்பேன்" என்று கூறினார்.

அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா வெற்றி பெற ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் இந்தியா வெற்றி பெற ரிஷப் பண்ட் முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட அவர் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

Read Entire Article