
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றனர். இதனால் விராட் மற்றும் ரோகித் இல்லாமல் இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எப்படி வெல்லப்போகிறது என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றது இங்கிலாந்து அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நிச்சயமாக, இது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த இரண்டு வீரர்களுமே இந்திய அணிக்காக பலகாலம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களிடம் தற்போது இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் இல்லாத வீரர்கள் உள்ளனர், அதுதான் இங்கிலாந்தில் உங்களுக்கு தேவையான ஒன்று. இது இங்கிலாந்துக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.
சச்சினுக்கு பிறகு மைதானத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் வீரராக விராட் கோலி திகழ்ந்து வந்தார். விராட் கோலி விளையாடினாலே டெஸ்ட் போட்டி என்றாலும் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு அவர் ஒரு மிகச்சிறப்பான வீரர். ரோகித் கடைசியாக இங்கிலாந்தில் மிகவும் சிறப்பாக விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக ரோகித் சர்மா இந்திய அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தி வந்தார். அவர்கள் இருவரும் இல்லாதது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டும் இழப்பு கிடையாது இந்திய அணிக்கும் மிகப்பெரிய இழப்பு. அவர்கள் இருவரும் இந்த தொடரில் விளையாடாதது எங்களுக்குத்தான் சாதகம்" என்று கூறினார்.