
காஞ்சிபுரம்,
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது.
தற்போது காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி வரதராஜ பெருமாள் அம்ச வாகனத்தில் எழுந்தருளி காஞ்சி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தபோது திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை - தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரமோற்சவ விழாவில் வடகலை - தென்கலை பிரிவினர் இன்று மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சுவாமி உற்சவத்தில் ஸ்தோத்திரம் பாடுவதில் மோதல் ஏற்பட்டதால், சாமி பல்லாக்கை ரோட்டின் நடுவே நிறுத்தி வைத்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ததை அடுத்து சுவாமி பல்லக்கு மீண்டும் புறப்பட்டது.