
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் புவனேஸ்வர்குமார் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குருனால் பாண்ட்யா 73 ரன்களும், விராட் கோலி 51 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குருனால் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் ஆட்ட நாயகன் குருனால் பாண்ட்யா அளித்த பேட்டியில், "வெற்றியை பெறுவது எப்போதும் நல்லது. சில நேரங்களில் நீங்கள் கடின உழைப்பை போட்டு அது நல்ல முடிவை கொடுக்கும்போது மிகவும் திருப்திகரமாக இருக்கும். அது நல்ல உணர்வையும் கொடுக்கும். இந்த போட்டியில் எனது பங்கு தெளிவாக தெரிந்தது. அதாவது 3 விக்கெட்டுகளை நாங்கள் இழந்தால் நான் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். ஏனெனில் எங்களிடம் லோயர் ஆர்டரில் டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா போன்ற ஹிட்டர்கள் இருக்கிறார்கள்.
விராட் கோலி போன்றவர் எதிரே இருக்கும்போது அனைத்தும் ஈசியாக இருக்கும். நான் அவருக்கு பாராட்டுகள் கொடுப்பேன். முதல் 20 பந்துகள், எனக்கு மோசமாக இருந்தது. ஆனால் அவர் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தார். நான் எப்போதும் ஒரு சிக்கனமான பந்து வீச்சாளர். ஒரு பந்து வீச்சாளராக, நான் எப்போதும் ஒரு படி மேலே இருக்க விரும்பினேன். நான் என் பந்துவீச்சில் உழைத்துள்ளேன்.
பேட்ஸ்மேன்களின் பலத்தை அறிந்து, அதை எனக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறேன். அது எனக்கு சாதகமாக செல்வதில் மகிழ்ச்சி. பவுன்சர் மற்றும் வைட் யார்க்கர் வீசி, நான் பயிற்சி செய்து வருகிறேன். ஐ.பி.எல். போன்ற தொடர்களில் பேட்ஸ்மேன்கள் பயமின்றி விளையாடுகிறார்கள். எனவே ஸ்பின்னராக நீங்களும் ஒரு படி முன்னே சென்று பவுன்ஸ் பந்துகளை வீச வேண்டும்" என்று கூறினார்.