கேப்டவுன்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான புனே ஆடுகளத்தில் நியூசிலாந்து ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ளாததே முக்கிய காரணமானதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக உலகிலேயே ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ள கூடியவர்கள் என்பது பேச்சு வழக்கு என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் கூறினார். ஆனால் அந்த காலம் சச்சின், கங்குலியுடன் முடிந்து விட்டதாக தெரிவித்த அவர் தற்போதைய இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்வதில்லை என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா மீதான விமர்சனங்களுக்கு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பதிலடியுடன் ஆதரவு கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியாவில் இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர்கள். எல்லா பேட்ஸ்மேன்களும் உலகின் சிறந்த ஸ்பின்னர்களை எப்போதும் நன்றாக எதிர்கொள்வார்கள் என்பது உண்மையல்ல. சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் நல்ல ஸ்பின்னர் பந்து வீசினால் நீங்கள் எவ்வளவு தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும் அழுத்தத்தின் கீழ் இருப்பீர்கள்.
பேட்ஸ்மேனுக்கு நல்ல திறன் மற்றும் மனம் இருந்தால் உலகின் எந்த சூழ்நிலையிலும் ரன்கள் அடிக்க முடியும். இந்திய வீரர்களிடம் எதுவும் தவறாக இல்லை. அனைவருமே சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளக் கூடியவர்கள். இந்தியாவுக்கு சென்றால் அவர்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்று ஒரு காலத்தில் எதிரணிகள் நினைத்தனர்.
ஆனால் அது 1990கள், 2000 காலங்களுடன் முடிந்து விட்டது. விராட் கோலியை பாருங்கள். அவர் தென் ஆப்பிரிக்காவிலும் சதங்கள் அடித்துள்ளார். 2-வது போட்டியில் அவர்கள் டாஸ் இழந்தார்கள். புனேவில் பிட்ச் ஆரம்பம் முதல் கடைசி சுழலுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஒரு ஸ்பின்னர் என்று யாருமே கருத மாட்டார்கள். ஆனால் சூழ்நிலை கிடைத்தால் பகுதி நேர பவுலரான அவருக்கு எதிராக கூட நீங்கள் தடுமாறுவீர்கள். காய்ந்த பிட்ச்சில் நியூசிலாந்தை விளையாட வைக்கலாம் என்று இந்தியா ரிஸ்க் எடுத்தது. ஆனால் அங்கே டாஸ் இழந்து எதிரணி பெரிய ஸ்கோர் அடித்து விட்டால் உங்களுக்கு பெரிய அழுத்தம் உண்டாகும்" என்று கூறினார்.