விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியது குறித்து கிளென் பிலிப்ஸ் நெகிழ்ச்சி

3 months ago 14

பெங்களூரு,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்டில் வெற்றி காண்பது 36 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் சர்பராஸ் கானுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி 70 ரன்கள் குவித்து இந்தியாவை தூக்கி நிறுத்த போராடினார். ஆனால் அப்போது 3வது நாளின் கடைசி பந்தில் நியூசிலாந்தின் பகுதி நேர பவுலரான கிளென் பிலிப்ஸ் சுழலில் விராட் கோலி அவுட்டானது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. மறுபுறம் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த பிலிப்ஸ் அதை வெறித்தனமாக கொண்டாடினார்.

இந்நிலையில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தது தம்முடைய பவுலிங் கெரியரில் உச்சகட்ட செயல்பாடு என்று பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் முதல் போட்டியை போலவே செயல்முறைகளை பின்பற்றி 2-வது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஆம் தற்சமயத்தில் விராட் கோலி என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய விக்கெட்டுகளில் ஒன்று. நாளின் கடைசி பந்தில் அது போன்ற ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியது அற்புதமானது. ஏனெனில் அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் கடைசி பந்தில் அந்த விக்கெட்டை எடுத்து பங்காற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் இந்தியா சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த விக்கெட்டை எடுத்தது அடுத்த நாளில் எங்களுக்கு வெற்றியின் வேகத்தை கொடுத்தது.

கடந்த காலங்களில் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் இங்கே வந்து முயற்சித்தும் வெற்றிகளை பெற முடியவில்லை. தற்போது நாங்கள் 36 வருடங்கள் கழித்து வென்றுள்ளது சிறப்பானது. முதல் போட்டியில் கிடைத்த வெற்றியால் நாங்கள் மீண்டும் எங்களுடைய செயல்முறைகளைப் பின்பற்ற உச்சமாக வருகிறோம். புனேவில் நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் அதே போன்ற வேகத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம்" என கூறினார்.

Read Entire Article