விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா கோரிக்கை

3 hours ago 2

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.

குறிப்பாக தோனிக்குப்பின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி இந்திய அணியை பல வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அலங்கரிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இது போக ஐ.சி.சி. கோப்பைகளை இந்தியா வெல்வதற்கும் அவர் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கிற்காக விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விராட் கோலிக்கு அவரது சொந்த ஊரில் பேர்வெல் போட்டியை நடத்தி விடை கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவர் (விராட் கோலி) இந்தியாவுக்காக பல சாதனைகளைச் செய்திருப்பதால் இந்திய அரசாங்கம் விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதே போல டெல்லியில் விராட் கோலிக்கு வழியனுப்புதல் போட்டி நடத்த வேண்டும் என்று கருதுகிறேன். அங்கே அவரது குடும்பத்தினரும் பயிற்சியாளரும் அவருக்கு ஆதரவாக இருந்திருப்பார்கள். நாட்டுக்காக நிறைய செய்த விராட் கோலியை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். அவர் பேர்வெல் போட்டிக்கு தகுதியானவர்" என்று கூறினார்.

Read Entire Article