
சேலம்,
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி புதூரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக ராஜேந்திரன், விற்பனையாளராக பெரியசாமி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஒரு சாக்கு மூட்டையில் மதுபான பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் உடனடியாக மேற்பார்வையாளர் ராஜேந்திரனை பிடித்து ஏன் இந்த மதுபாட்டில்களை வெளியில் இருந்து எடுத்து வருகிறீர்கள்? போலி மதுவா? என்று அவரை சுற்றி வளைத்து விசாரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து இந்த சரக்கு பாட்டில் எங்கிருந்து வந்தது? ஏன் இங்கு எடுத்து வந்தார்கள்? என்று பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.