
கராச்சி,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். சமீப காலமாக பார்மின்றி தவித்து வந்த அவர் இந்த முக்கியான போட்டியில் சதத்தை அடித்து தனது தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் தான் ஏற்கனவே சொன்னது போல் எவ்வளவுதான் சுமாரான பார்மில் இருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி நடைபெற்றால் விராட் கோலி பார்முக்கு வந்து விடுவார் என்பதை அவர் நிரூபித்து விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலியிடம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறோம் என்று நீங்கள் சொன்னால் அவர் முழுமையாக தயாராகி சதத்தை அடிப்பார் என்பதை மீண்டும் நாம் பார்த்துள்ளோம். அவருக்கு தலை வணங்குகிறேன். சூப்பர் ஸ்டார் போன்ற அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த சேசர். அவர் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான் என்பதில் சந்தேகமில்லை.
நேர்மையான மனிதனான அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்துள்ள அவர் 100 சர்வதேச சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன். அவர் அதை செய்வதை நான் விரும்புகிறேன். இந்த பாராட்டுகளுக்கு தகுதியானவரான அவருக்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
விராட் கோலியின் கடின உழைப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். மொத்த உலகமும் பார்மில் இல்லை என்று சொல்லி காத்திருந்தபோது பெரிய போட்டியில் வந்த விராட் கோலி எளிதாக ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். நம்மை விட சிறப்பாக விளையாடிய அவர் இதற்காக பின்புலத்தில் நிறைய கடின உழைப்பை கொடுத்துள்ளார்" என்று கூறினார்.