![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38922937-10-virat-kohli-afp.webp)
மும்பை,
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்தில் நடக்கிறது.
முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்து பார்முக்கு திரும்பினார்.
அதேபோல் மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலி எப்போது பார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். நாளை நடைபெறும் போட்டியில் அவர் பார்முக்கு திரும்பினால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்நிலையில், பார்மை தாண்டி விராட் கோலி இப்போதும் சிறந்த வீரர் என வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆர்.சி.பி. அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, விராட் கோலி இப்போதும் உலகின் சிறந்த வீரர். பார்மை தாண்டி விராட் கோலி இப்போதும் சிறந்த வீரர். அவருடைய புள்ளி விபரங்களும், அனைத்து வகையான பார்மெட்டில் எவ்வளவு சதங்கள் அடித்துள்ளார் என்பதும் அவற்றை நிரூபிக்கும்.
இது அனைத்து வகையான வீரர்களும் கடக்கக் கூடிய ஒரு கடினமான காலமாகும். இது விராட் கோலி கெரியரின் கடைசிப் பகுதியில் வருகிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், இது சாதாரணமாக நடக்கக் கூடியதாகும். இது போன்ற சூழ்நிலைகளில் அவர் தம்மைத்தாமே ஆதரவு கொடுத்துக் கொண்டு மீண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.