
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கனமழை பெய்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய பொருட்களை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதில், பெங்களூருவின் ஹோரமாவு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கியதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகளும் அதிக அவதிக்கு உள்ளானார்கள். மழைநீர் தேங்கியதில் சாக்கடை வழிகளும் நிரம்பி வழிந்தன. இதனால், அரையடி உயரத்திற்கு வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் பகுதியளவு மூழ்கி உள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில் தமிழகம், கர்நாடகாவின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து அதிகாலை 1 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் மழையால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி கைவிடப்பட்டது.