வியாபாரிகளுக்கு வருவாய் ‘பொங்கல்’; அய்யலூர் வாரச் சந்தையில் ரூ3 கோடிக்கு ஆடு விற்பனை: திங்களன்று விசேஷ சந்தை கூடுகிறது

4 months ago 14


வேடசந்தூர்: பொங்கல் பண்டிகையையொட்டி அய்யலூர் ஆட்டுச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழன்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இங்கு ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்க திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர்.  அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று அய்யலூரில் ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே ஏராளமான கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஆடு, கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர். சண்டை சேவல்களை மோத விட்டு பார்த்து இளைஞர்கள் வாங்கி சென்றனர்.

நேற்றைய சந்தையில் 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.7,500 முதல் ரூ.8,500 வரையிலும், செம்மறி ஆடு ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை விற்பனையானது. மேலும் ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400ல் இருந்து ரூ.450 வரையிலும், சண்டை சேவல்கள் ரூ.20 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் பொங்கலை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை சிறப்பு சந்தை நடைபெறும் என்றும், அன்றைய தினம் ஆடு, கோழிகளின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

The post வியாபாரிகளுக்கு வருவாய் ‘பொங்கல்’; அய்யலூர் வாரச் சந்தையில் ரூ3 கோடிக்கு ஆடு விற்பனை: திங்களன்று விசேஷ சந்தை கூடுகிறது appeared first on Dinakaran.

Read Entire Article