பெரம்பூர்: வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிவந்த கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக ஐந்து பேர் உயிர் தப்பினர். சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி இன்று காலை 8.30 மணியளவில் ஒரு கார் படுவேகமாக செல்வதையும் அந்த காரை சிறுவன் ஒருவன் ஓட்டிச்செல்வதையும் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில், அந்த கார், வியாசர்பாடி மேம்பாலம் முடியும் இடத்தில்வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து சாலையில் ஓடியது. இதை பார்த்து மக்கள் ஓடிவந்து காரில் சிக்கி இருந்த 5 பேரை மீட்டு பார்த்தபோது பெரிய அளவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது தெரிந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வியாசர்பாடி போக்குவரத்து போலீசாரும் புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டிவந்தது 18 வயது சிறுவன் என்பதும் அவருக்கு லைசென்ஸ் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்தனர். இதுபற்றி நடத்திய விசாரணையில், காரில் வந்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் சவுகார்பேட்டையில் வசித்து வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
The post வியாசர்பாடியில் பரபரப்பு; சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.