டெல்லி: வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃப் வாரிய மசோதா’ மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது; அமைச்சரவையின் எனது சக அமைச்சர் அறிமுகப்படுத்திய மசோதாவை நான் ஆதரிக்கிறேன். மதியம் 12 மணி முதல் விவாதம் நடந்து வருவதை நான் கவனமாகக் கேட்டு வருகிறேன்.
பல உறுப்பினர்களிடையே உண்மையாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பல தவறான கருத்துக்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். வக்ஃப் மசோதா பெயரில் இஸ்லாமியர்களை அச்சுறுத்தி வாக்கு வங்கி அரசியல் நடக்கிறது. தவறான கருத்துகளை நாடு முழுவதும் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது. வஃக்ப் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேசத்தை பிளவுபடுத்துகின்றன. முஸ்லிம்களின் மத செயல்பாடுகள், அவர்களின் நன்கொடை சொத்துகளுக்கு இடையூறு விளைவிப்பதற்காகவே இந்த சட்டம் உருவாக்கப்படுவதாக மாயையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
வக்ஃப் வாரியங்களை மேற்பார்வையிடும் நிர்வாக பணியை மட்டும் அதிகாரிகள் செய்வார்கள். வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெற மாட்டார்கள். வக்ஃப் சொத்து நிர்வாகத்தில் குளறுபடி செய்வோரை கண்காணிக்கும் பணியை அதிகாரிகள் செய்வார்கள். வக்ஃப் விவகாரங்களில் அரசு தலையீடு இருக்காது; அந்த எண்ணமும் இல்லை என்று கூறினார்.
The post வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது: மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை appeared first on Dinakaran.