லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் 8ம் நிலை வீராங்கனையான போலந்தின் 24 வயது இகா ஸ்வியாடெக், 22 வயதான டென்மார்க்கின் கிளாரா டௌசன் மோதினர். இதில் 5-4, 6-1 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் 7ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் 18 வயதான மிர்ரா ஆண்ட்ரீவா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் 10ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் 24 வயது எம்மா நவரோவை வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ரஷ்யாவின் 26 வயதான லியுட்மிலா சாம்சோனோவா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் ஆகியோரும் 4வது சுற்றில் வென்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயது ஜானிக் சின்னர், 9வது ரேங்க் வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ்வுடன் மோதினார். முதல் 2 செட்டை 6-3, 7-5 என கிரிகோர் டிமிட்ரோவ் கைப்பற்றினார். 3வது செட் 2-2 என்ற நிலையில் இருந்தபோது, கிரிகோர் டிமிட்ரோவுக்கு வலது மார்பு தசையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மார்பில் கைவைத்தபடி மைதானத்தில் சரிந்தார். அப்போது சின்னர் வலையைச் சுற்றி வந்து தனது நெருங்கிய நண்பரான டிமிட்ரோவை தூக்கி நாற்காலியில் அமர உதவினார். தொடர்ந்து அவரால் ஆட முடியாததால் வெளியேறினார். இதனால் ஜானிக் சின்னர் கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
இன்று கால்இறுதி போட்டிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ஜெர்மனியின் லாரா சீக்மண்ட், 7.10 மணிக்கு அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா- ரஷ்யாவின் அனஸ்தேசியா மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் மாலை 5.30 மணிக்கு அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் ரஷ்யாவின்கரேன் கச்சனோவ், இரவு 7.10 மணிக்கு ஸ்பெயின் அல்காரஸ்-இங்கிலாந்தின் கேமரூன் நோரி மோதுகின்றனர்.
The post விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ஆண்ட்ரீவா கால்இறுதிக்கு தகுதி: ஜானிக் சின்னருக்கு `அதிர்ஷ்டம்’ appeared first on Dinakaran.