லண்டன்: டென்னிஸ் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று கோலாகலமாக துவங்கின. துவக்க நாளில் நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), அமெரிக்காவில் பிறந்து கனடா நாட்டுக்காக ஆடி வரும் கார்சன் பிரான்ஸ்டைன் (24) உடன் மோதினார்.
துடிப்புடன் ஆடிய சபலென்கா முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். 2வது செட்டில் கார்சன் சற்று சவாலை எழுப்பியபோதும் சாமர்த்தியமாக சமாளித்த சபலென்கா அதையும் கைப்பற்றினார். இறுதியில் 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, ஹங்கேரி வீராங்கனை அன்னா பொண்டாரை, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் செக் வீரர் ஜிரி லெஹெக்கா, ஆஸ்திரேலியா வீரர் ஜோர்டான் தாம்ப்சன், இத்தாலி வீரர் மாட்டியா பெலூக்கி, அமெரிக்க வீரர் லேர்னர் டியன் உள்ளிட்டோர் வெற்றி வாகை சூடினர்.
The post விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்: மெர்சல் ஆன கார்சனை வெற்றி கண்ட சபலென்கா; 2வது சுற்றுக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.