சென்னை,
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் லட்சக்கணக்கான பொதுமக்களை இன்னல்களுக்குள்ளாக்கிய தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற பார்வையாளர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளையோ, நிகழ்ச்சி நிறைவடைந்து திரும்பிச் செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகளையோ செய்து தராத தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே 5 பேரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கும் பவளவிழா மாநாட்டை நடத்துவதற்கும் அதீத கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் தி.மு.க. அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, நீர்ச்சத்து குறைபாடு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.