சென்னை: “இந்திய விமானப்படை அரசுக்கு, 100 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். நாங்கள் ஏற்பாடு செய்தததோ 4000-த்துக்கும் மேற்பட்ட படுக்கைகள். அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்,” என்று மெரினா உயிரிழப்பு சம்பவம் குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்திய விமானப்படை தொடங்கியது 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி. இந்த தேதியில் தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை 92 ஆண்டுகளை நிறைவு செய்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இத்தகைய விமானப்படை தங்களது பலத்தை மற்றும் கட்டமைப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் பெரிய விமான சாகசத்தை உலகுக்கு தெரிவித்திடும் வகையில் விமான வான்சாகசத்தை செய்வதற்காக சென்னையை தேர்ந்தெடுத்து செய்கிறார்கள்.