புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர்பாக ஆங்கில செய்தி சேனலுக்கு ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அளித்த பேட்டி: 170க்கும் மேற்பட்ட விமானங்கள் வெடிகுண்டு அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த அவசர முடிவு எடுக்க மாட்டேன். முழுமையான விசாரணை நடக்கும் வரை காத்திருப்போம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றதகவல் கிடைத்தவுடன் தான் சதி உள்ளதா அல்லது பண்டிகை காலம் தொடர்பாக உள்நோக்கம் உள்ளதா என்பதை கூற முடியும். புலனாய்வு அமைப்பினர் மற்றும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
அச்சுறுத்தல்கள் காரணமாக, தொழில் துறையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கு பின்னால் உள்ள தனிநபர்கள் விமான பயணம் செய்ய தடை விதிக்கப்படும். நாங்கள் விமான நிலையங்களில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துகிறோம். இது எந்த விதமான பயத்தையும், பீதியையும் பரப்ப வேண்டிய தருணம் அல்ல. மக்கள் பயப்பட வேண்டாம். ஒன்றிய அரசு தேவையான அனைத்து நடடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
The post விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: விமான போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.