சென்னை: மீன்பிடி துறைமுகம் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, காசிமேடு, சிங்காரவேலர் நகர் 12வது தெருவில் வசித்து வரும் விஜயன், வ/69, த/பெ.வைத்தியலிங்கம் என்பவர் காசிமேடு கடலோரத்தில் உள்ள படகில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். விஜயன் நேற்று காலை சுமார் 11.00 மணியளவில் காசிமேட்டில் உள்ள நாகூரான் தோட்டம் மீன் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, 4 நபர்கள் விஜயனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தகாத வார்த்தையில் பேசி மேற்படி விஜயன் பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.500/-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து விஜயன் N-4 மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சுபாஷ், வ/20, த/பெ.திருமலை, திடீர் நகர் 2வது தெரு, தண்டையார்பேட்டை, சென்னை. 2.நிர்மல், வ/19, த/பெ.சத்யராஜ், திடீர் நகர் 4வது தெரு, புது வண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில் எதிரி சுபாஷ் மீது ஏற்கனவே 1 அடிதடி வழக்கு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்களை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.
The post மீன்பிடி துறைமுகம் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 நபர்கள் கைது appeared first on Dinakaran.