விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

3 months ago 21

சென்னை,

பொதுவாக விமான பயணிகள் தங்கள் நேரத்தை திட்டமிட்டு பல அலுவல்களை வகுத்தே பயணத்தை மேற்கொள்வார்கள். அதனால், விமானங்கள் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் சரியான நேரத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்று நினைப்பார்கள். சில நேரங்களில் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், இணைப்பு விமானத்தை பிடிக்க முடியாத நிலை பயணிகளுக்கு ஏற்பட்டு, இன்னல்களுக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அதுபோல, பல அவசர பணிகளுக்கு செல்ல வேண்டியவர்களின் பணிகளெல்லாம் தடைபடும். ஆக, விமானங்கள் புறப்படும் நேரம் என்பது மிக மிக முக்கியமானது.

ஆனால், சமீப காலங்களில் விமானம் புறப்படுவதற்கு முன்பு வரும் வெடிகுண்டு மிரட்டல்களால், பல விமானங்கள் தாமதமாக செல்கின்றன. இந்த வாரத்தில் மட்டும் 4 நாட்களில் 34 விமானங்களுக்கு இதுபோல வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு, பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது மட்டுமல்லாமல், நடுவழியிலும் வந்த மிரட்டலால் பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், மும்பை விமான நிலையத்தில் இருந்து 200 பயணிகளுடன் டெல்லி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்ததை தொடர்ந்து, உடனடியாக அந்த விமானம் ஆமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டபோது அது புரளி என்பது தெரியவந்த நிலையில், தாமதமாக டெல்லி புறப்பட்டு சென்றது.

கடந்த திங்கட்கிழமை மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் ஒரு ஏர் இந்தியா விமானம், 2 இண்டிகோ விமானங்களுக்கு இதுபோல வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை10 விமானங்களுக்கும், மறுநாள் புதன்கிழமை 6 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதில், 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதை மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட சேலையூரை சேர்ந்த பிளஸ்-1 மாணவர்கள் 2 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை மட்டும் 15 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் மும்பையில் இருந்து லண்டனுக்கு பறந்து கொண்டிருந்த ஒரு ஏர் இந்தியா விமானமும் அடங்கும். லண்டனில் தரை இறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இந்த மிரட்டல் வந்ததால், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு தரை இறக்கப்பட்டது. மேலும், இண்டிகோ, விஸ்தாரா உள்பட இந்தியாவில் பல நகரங்களுக்கு சென்று கொண்டிருந்த விமானங்களுக்கும், வெளிநாடுகளுக்கு சென்ற சில விமானங்களுக்கும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பாக்கிவிட்டது.

பெரும்பாலான விமானங்களுக்கு வந்த மிரட்டல்கள் வெளிநாடுகளில் இருந்து இ-மெயிலில் வந்திருக்கிறது. சோதனையில் புரளி என தெரியவந்தாலும், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களால் விமான எரிபொருள் அதிகம் செலவாகிறது. அதில் பணிபுரியும் ஊழியர்களும் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பயணிகளும் தாமதத்தால் விமான பயணத்தை வெறுக்கும் நிலை ஏற்படும்.

சர்வதேச விமானப் போக்குவரத்தில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் நற்பெயரை சீர்குலைக்க நடந்த முயற்சியா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இதுபோல புரளியை பரப்புபவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து, பின்னணியில் எந்த சக்தி இருக்கிறது? என்பதை வெளிக்கொண்டுவந்து உலகுக்கு காட்டவேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.

Read Entire Article