புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையில், இயந்திர, பராமரிப்பு பிரச்னைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் கூறி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம், 30 வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில், 241 விமான பயணிகள் உட்பட 260 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) கடந்த 12ம் தேதி முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டது. அதில், எரிபொருள் சுவிட்ச் கட்-ஆப் நிலையில் இருந்தது விமானிகளின் குரல் பதிவுகள் மூலம் அறிவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு வசதிகள் கொண்ட எரிபொருள் சுவிட்ச் எப்படி கட்-ஆப் நிலைக்கு சென்றது என்பது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது: முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானத்தின் இயந்திரம் மற்றும் பராமரிப்பில் எந்த பிரச்னையும் கண்டறியப்படவில்லை. அனைத்து கட்டாய பராமரிப்பு பணிகளும் செய்யப்பட்டிருந்தது. எரிபொருளின் தரத்தில் எந்த பிரச்னையும் இல்லை. விமானம் மேலே எழும்புவதிலும் எந்த அசாதாரண நிலையும் இல்லை. விமானிகளுக்கும் சுவாச பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அவர்களின் மருத்துவ அறிக்கையிலும் எந்த பிரச்னையும் இல்லை.
முதற்கட்ட அறிக்கை வெளியானதும், உலகத்துடன் சேர்ந்து, நாங்களும் என்ன நடந்தது என்பது குறித்து கூடுதல் விவரங்களை பெறத் தொடங்கினோம். இது அதிக தெளிவை தந்ததோடு கூடுதல் கேள்விகளையும் எழுப்பியது. கடந்த 30 நாட்களும் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் பல தகவல்கள் பின்னர் நிராகரிக்கப்படுகின்றன. எனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை ஊகங்களால் திசைதிரும்பாமல் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
The post விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கையில் இயந்திர, பராமரிப்பு பிரச்னை எதுவும் கண்டறியப்படவில்லை: ஊகங்களை தவிர்க்க ஏர் இந்தியா வலியுறுத்தல் appeared first on Dinakaran.